தி நகர் போக் சாலையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் நான்கு திரையரங்குகள் நிறையும் அளவுக்கு கூட்டம். தெருவெங்கும் அல்டிமேட் ஸ்டாரை வாழ்த்தி போஸ்டர்கள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள். அசல் படத் தொடக்க விழாவை படத்தின் ஓபனிங் நாளைப் போல் அசத்தினர் அஜித்தின் ரசிகர்கள்.

நல்லவேளை, தொடக்கவிழா அழைப்பிதழில் யார் யார் விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்பதை குறிப்பிடவில்லை. ரஜினியின் பெயரை போட்டிருந்தால் தி நகர் திமிலோகப்பட்டிருக்கும்.

சரணின் குருநாதர் பாலசந்தர் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தாணு, ஏ.வி.எம். சரவணன், கே.ஆர்.ஜி., நடிகர்கள் சூர்யா, கார்த்தி, பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோரை விழாவில் பார்க்க முடிந்தது. விழாவின் ஹைலைட் ரஜினியின் பே‌சியது.

பாபா படத் தோல்விக்குப் பிறகு எனக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. இந்த வீட்டில் வைத்துதான் சந்திரமுகி படத்துக்கு பூஜை போட்டார்கள். படம் மிகப் பெரிய வெற்றி. அசல் படத்துக்கு இப்போது பூஜை போடுகிறார்கள். இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என மனப்பூர்வமாக வாழ்த்தினார்.

தனது பேச்சின் நடுவே, அசல் ஹீரோ அஜித்தான் என்று ரஜினி குறிப்பிட்டபோது பார்வையாளர்கள் பக்கமிருந்து விசில்.

சிவாஜி இந்த வீட்டில் இருந்துதானே பாசமலர், பாலும் பழமும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படங்களின் சூட்டிங்கிற்கு சென்றிருப்பார் என வைரமுத்து சிவாஜியை நினைவு கூர்ந்தவிதம் சோகமான மலரும் நினைவு. இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட ரஜினி, சிவாஜி வாழ்ந்த அன்னை இல்லம் தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகுக்கே தாய் வீடு என்றார்.

ரஜினியின் வருகையும், அஜித்தை அவர் வாழ்த்திய விதமும் ரசிகர்களை ரொம்பவே உணர்ச்சிவசப்படுத்தியது. அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்தான், சூப்பர் ஸ்டாரே சொல்லிட்டாரே … கள்ளுண்ட களிப்பில் கலைந்தது ரசிகப் பட்டாளம்.

Comments (0)